பாஜவுடன் நள்ளிரவு கூட்டணியும், கள்ளக் கூட்டணியும் டெபாசிட்டாவது வாங்குறதுக்கு தான் பிரசாரம் பண்றாங்க… முத்தரசன் லகலக

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ஏழுகிணறு அம்மன் கோவில் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணிக்கு எதிராக இரண்டு கூட்டணிகள் உள்ளன. ஒன்று நள்ளிரவு கூட்டணி. இன்னொன்று கள்ளக் கூட்டணி. இந்த கூட்டணிகள் டெபாசிட் பெறுவதற்காகவே பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் களத்தில் நின்று உதவி செய்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோல் தென் மாவட்டத்தில் 5 மாவட்டங்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் கூறி நிவாரண உதவியை வழங்குமாறு முதலமைச்சர் கூறினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார், பாதிப்புகளை பார்த்தார், சென்று விட்டார். அதை தொடர்ந்து ஒன்றியக்குழு வந்தது. அனைத்து மாவட்டங்களையும் ஆய்வு செய்து, அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தது. இருந்தபோதும் ஒரு பைசா நிதி கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஆனாலும் தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பாஜ பயப்படுகிறது. ராமதாஸ் பெட்டியை வாங்கிக்கொண்டு நள்ளிரவில் கூட்டணியை முடிவு செய்தார்.

எடப்பாடி பழனிசாமியும் எந்த ஒரு கூட்டத்திலாவது மோடியை விமர்சித்து பேசுகிறாரா? இதற்குதான் இது கள்ளக் கூட்டணி என்று கூறுகிறோம். மோடி அரசு சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறது. இதனை அகற்ற வரும் 19ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக பகுதிச் செயலாளர்கள் ராஜசேகர், முரளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வா, தமிழன் பிரசன்னா, துறைமுகம் தேர்தல் பார்வையாளர் பிரபு, மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, வழக்கறிஞர் பரிமளம், வட்டச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட திமுகவினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

The post பாஜவுடன் நள்ளிரவு கூட்டணியும், கள்ளக் கூட்டணியும் டெபாசிட்டாவது வாங்குறதுக்கு தான் பிரசாரம் பண்றாங்க… முத்தரசன் லகலக appeared first on Dinakaran.

Related Stories: