பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல் பிரசாரம் செய்ய முடியாது: நடிகை குஷ்பு அதிரடி அறிவிப்பு

பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் திடீரென பிரசாரத்தில் இருந்து விலகி கொள்வதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக குஷ்பு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியில் 2019ம் ஆண்டு துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எனக்கு முதுகின் வால் எலும்பில் முறிவு ஏற்பட்டது.

இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை மிகவும் பாதிப்படைய செய்தது. இதனை தொடர்ந்து பல்வேறு சிகிச்சை பெற்று வந்தேன். ஆனால் குணமடையவில்லை. இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்கு கண்டிப்பாக அறிவுறுத்தியது. இருந்த போதும் அதனை புறக்கணித்து பாஜவின் தொண்டராகவும், பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் தொடர்ந்து பிரசாரம் செய்தேன்.

மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்ததால் தற்போது நிலைமை மோசமாகி விட்டது. இந்த பிரச்னையில் இருந்து விடுபட தேவையான நடவடிக்கையை எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது உயிருக்கு அச்சுறுத்தலான சிகிச்சை முறையல்ல. இது எனது நல்ல எதிர்காலத்துக்கான சிகிச்சை முறை. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியவில்லை என்ற எண்ணம் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் எனது சமூக வலைதளம் மூலம் பாஜவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வேன். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதை, நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல் பிரசாரம் செய்ய முடியாது: நடிகை குஷ்பு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: