தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்தால் குறைந்த விலையில் தரமான மது: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

அமராவதி: ஆந்திராவில் குறைந்த விலையில் தரமான மதுபானம் விற்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி வித்தியாசமான வாக்குறுதி அளித்துள்ளது. ஆந்திராவில் மக்களவை, பேரவைகளுக்கு மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இரண்டு தேர்தல்களை சந்திக்க உள்ள ஆந்திர மாநிலத்தில் பிரசார களம் சூடு பிடித்துள்ளது. பொதுவாக தேர்தலின்போது அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். ஆனால் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் மதுபான பிரியர்களுக்காக வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு கடந்த வாரம் தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய சந்திர பாபு நாயுடு, “2019 பேரவை தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்துவோம் என்று சொன்ன வாக்குறுதியை முதல்வர் ஜெகன் மோகன் நிறைவேற்றவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பொருள்களின் விலையும் அபரிமிதமாக உயர்ந்து விட்டது. குறிப்பாக மதுபானங்களின் விலை வானுயர அதிகமாகி விட்டது. தெலுங்கு தேசம் ஆட்சியில் ரூ.75க்கு விற்பனையான மதுபானங்களின் விலைகள் ஜெகன் மோகன் ஆட்சியில் 2 மடங்கு அதிகரித்து விட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 2019ல் ஆட்சிக்கு வந்தது. புள்ளிவிவர அறிக்கைகளின்படி 2019-20ல் ரூ.17,000 கோடிக்கு மேல், 2022-23ல் ரூ.24,000 கோடி மதுபான விற்பனை மூலம் மாநில அரசு வருவாய் ஈட்டி உள்ளது. மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் அதிக விலைக்கு தரமற்ற மதுபானங்கள் விற்கப்படுகிறது. தரமற்ற மதுபானத்தால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர் விற்பனை செய்யப்படும்” என்று உறுதி அளித்தார்.

The post தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்தால் குறைந்த விலையில் தரமான மது: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: