முத்துப்பேட்டை எடையூரில் சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு

 

முத்துப்பேட்டை, ஏப். 6: தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை எடையூரில் சேதமான குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பகுதிகளுக்கு அங்குள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் எடையூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள குடிநீர் டேங் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் புதுத்தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 4நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று அங்கு உள்ள குடிநீர் டேங்கில் பொருத்தப்பட்ட குழாய்களை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தியும் வெளியாகியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் குடிநீர் குழாயை உடைத்தவர்களை வரவழைத்து கண்டித்து அவர்களுக்கு இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை செய்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அறிவுரை வழங்கினர். அதன்பின்னர் உடைக்கப்பட்ட குழாய் பைப் மற்றும் வால்வுகள் சரி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post முத்துப்பேட்டை எடையூரில் சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: