பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை

 

காஞ்சிபுரம்: பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்கோழி கிராமத்தில் 2 பொதுப்பணித்துறை ஏரிகளும், 2 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரிகளும் உள்ளன. இந்த, ஏரிகளின் நீர் பாசனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெல்பயிர் பயிரிடப்பட்டுள்ளன.

இதனால், நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையின்படி வேளாண்மைத்துறை அதிகாரிகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளும் நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இக்கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் பகுதியில்தான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என நினைத்து, சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்து, சீரமைப்பு பணிகளை செய்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவியல் குவியிலாக கொட்டி வைத்துள்ளனர். தற்போது, பெருங்குடி கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி தராமல், காலம் கடத்தி வருகின்றனர்.

மேலும் விவசாயிகளோ, விளைநிலங்களோ அதிகமில்லாத வேறு ஒரு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதித்து உள்ளனர். இதனையறிந்த, பெருங்கோழி கிராம விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கிராமம் முழுவதும் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: