509 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலத்தில் கொடியேற்றம்

பொன்னேரி: பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரம் சனிக்கிழமை தேர்பவனியும் அதனை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுகிழமை சிறப்பு திருப்பலியோடு திருவிழா முடிவது வழக்கம்.

இந்நிலையில், ஈஸ்டர் பெருவிழா முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் 509 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் திருவிழாவையொட்டி அன்னையின் கொடியானது மேள தாளத்துடன் பக்தர்கள் திரளாக கொடியினை சுமந்து திருவீதி உலா வந்தனர். பின்னர் ஆலய கொடிமரத்தில், சென்னை மயிலை மறைமாவட்ட அருட்தந்தைகள் மார்டின் சார்லஸ், ஜோசப் ஜெயக்குமார் மற்றும் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபர் கபிரியேல் ஆகியோர் கொடியினை மந்திரித்து கொடியேற்றி இந்த விழாவை துவக்கி வைத்தனர்.

இதற்கு முன்னதாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அன்னையின் கொடி பக்தர்களின் முன்னிலையில் மந்திரிக்கப்பட்டு கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. அதன்பின் நற்கருணை ஆசிவாதமும், சிறப்பு மறையுரையும் நடைப்பெற்றது. நடுவூர்மாதா குப்பம் கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டனர். மேலும், ஞாயிறன்று பிற்பகல் 2 மணி முதல் சாதி, மத, இன வேறுபாடின்றி திருத்தலத்தை அலையென நாடிவந்து காணிக்கைகளை செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர்.

The post 509 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலத்தில் கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: