பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் ஜனநாயக தேர்தல் முறை ரேஷன் கடை ஒழிக்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வேளச்சேரி பகுதியில் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், இல்லம் தேடி கல்வி உள்பட ஏறதாழ 30க்கும் மேற்பட்ட திறப்பு திட்டங்கள் மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மோடியின் 10 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் ஏதோனும் ஒன்றை சொல்வதற்கு பாஜவினருக்கு துணிவு இருக்கிறதா. எனவே, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த மீண்டும் தமிழச்சி தங்கப்பாண்டியனை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார்.

தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், ‘‘வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க, திமுக அரசு மழைநீர் வடிகால் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது திமுகவினர் தான் உங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். வேறு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் ஜனநாயக தேர்தல், ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்படும் அபாயத்திற்கு உள்ளாவோம். எனவே, சிந்தித்து வாக்களிக்க வேண்டும்,’’ என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பாண்டிச்சேரியில் கவர்னராக பணிபுரிந்தபோது, எந்த ஒரு மக்கள் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அங்கு தற்போது ஒரு ரேஷன் கடை கூட இல்லை.

இதுபற்றி அவரிடம் கேளுங்கள். ரேஷன் கடையை முற்றிலும் ஒழித்துவிட்ட ஒரே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தான். பாண்டிச்சேரியை போல் தமிழ்நாட்டிலும் ரேஷன் கடைகளை ஒழித்துவிட நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மோடியின் ஆட்சியில் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இப்போவாது மோடியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல தயாரா, ஒரு புதிய வரலாற்றை இந்தியாவிலே தொடங்குவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்,’’ என்றார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் அரசு, மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் ஜனநாயக தேர்தல் முறை ரேஷன் கடை ஒழிக்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: