பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடையும் இட ஒதுக்கீடும் இருக்காது: திருமாவளவன் எச்சரிக்கை

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவை தேர்தல் இரண்டாம் சுதந்திர போர். தற்போது கொடிய சக்திகளான மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி ஆகிய சங்பரிவார் கும்பலை எதிர்த்து நடைபெறுகிறது இரண்டாம் சுதந்திர போர்.

தற்போது அரசியல் எதிரிகளாக அதிமுகவையோ, பாமகவையோ முன்னிறுத்தி விமர்சனம் செய்யவில்லை. மக்களின் எதிரியான பாஜவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜவோடு திமுக இணக்கமாக இருந்திருந்தால் எந்தவித நெருக்கடியும் வந்து இருக்காது. அமைச்சர்கள் மீது எவ்வித வழக்குகளும் பாய்ந்திருக்காது. ஆனால் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சமூக நீதியை காப்பாற்றிட வேண்டும்.

அதற்காக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை ஒற்றுமையுடன் சந்தித்து வருகிறோம். அதிமுக கூட்டணி கொள்கை இல்லாமல் கூட்டணி சேர்ந்ததால் தற்போது இரண்டாக பிரிந்து விட்டது.  வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர்களை பாஜ அரசு காப்பாற்றி ரூ.25 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு இருக்காது. ரேஷன் கடை இருக்காது. எனவே, இந்தியா கூட்டணியின் சின்னமான பானை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடையும் இட ஒதுக்கீடும் இருக்காது: திருமாவளவன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: