நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நான் ஒலிப்பேன்; எனக்கு வாக்களித்தால் தொகுதி மக்களின் வாழ்வு தாமரையை போல மலரும்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்

சென்னை: தென்சென்னை நாடாளுன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொகுதியை வேற லெவலில் மாற்றி காட்டுவேன் என்ற அவரது வாக்குறுதி தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, தென்சென்னை தொகுதியின் வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஏராளமான திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்து வருகிறார். தன்னை வெற்றி பெறச் செய்தால் இந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தியே தீருவேன் என்று உறுதி அளித்து வருகிறார்.

இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் தமிழிசை சவுந்திரராஜனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து எங்கள் வாக்குகள் உங்களுக்குத் தான் என்று உறுதி அளித்து வருவதும் உற்சாக வரவேற்பும் அளித்து வருகின்றனர். அவர்களிடம் சென்று கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாள் நகர், ஏஜிஎஸ் காலனி, தேவி கருமாரியம்மன் நகர், ராம் நகர், விஜயநகர் குறுக்குத் தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பில் சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
ஆளுநர் பதவி எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம். அதற்கு நன்றியுடைவளாக இருப்பேன். ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நான் மக்களோடு மக்களாக இருப்பதற்கும் மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கும் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆளுநர் பதவியில் சிறப்பாக செயல்பட்டேன். அதேபோல நாடாளுமன்ற உறுப்பினராகி சிறப்பாக பணியாற்றுவேன்.

நான் தினந்தோறும் பிரசாரம் செய்வது மட்டுமல்லாமல், மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அதை குறிப்பு எடுத்து வருகிறேன். இது பிரசார பயணம் மட்டுமல்லாமல், பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய பயணம் தான். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மக்களின் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும்.

என்னுடைய ஆசை நாடாளுமன்ற உறுப்பினராக ஆவது. நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நான் ஒலிப்பேன். நான் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து 25 ஆண்டுகளாக உழைத்து கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளேன். தென்சென்னையில் உள்ள பகுதியை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. தென் சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் தென்சென்னை மக்களின் வாழ்வு தாமரை போல மலரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நான் ஒலிப்பேன்; எனக்கு வாக்களித்தால் தொகுதி மக்களின் வாழ்வு தாமரையை போல மலரும்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: