சென்னை: ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவது தொடர்பான திட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாசுவை அகற்றுவது தொடர்பான திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து ஆலை மூடப்பட்டது. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளால் அந்த பகுதி நிலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆலையை இடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக ஆர்வலர் பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதாகவும், அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆலையில் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுப்பதற்கான பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் துவங்கி இருப்பதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மாசு அகற்றும் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற மாசு கட்டுப்பாடு வாரியம், அப்பகுதிக்கு தனியாரை நியமிக்க முடிவெடுத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதியில் எந்தளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை வகைப்படுத்த வேண்டும் எனவும் மாசுவை அகற்றி சீர் செய்வதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்யும் திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.