வெள்ள பாதிப்பு நிவாரணம் தராமல் இழுத்தடிப்பு ரூ.2000 கோடி நிதி கோரி தமிழக அரசு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது; ஒன்றிய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: தமிழ்நாடு வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ரூ.37,907 கோடியை விரைந்து விடுவிக்கவும், அதேப்போன்று இடைக்கால அவசர நிதியாக ரூ.2000 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வரலாறு காணாத இந்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டதோடு, உடனடியாக அது வழங்கப்பட்டது.

மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை பராமரிப்பு, தேவையான நிவாரண பொருட்கள் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்து தந்தது. இதையடுத்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு அறிக்கை கொடுத்து இருந்தது. இதுபோன்ற சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

அதேப்போன்று கேலோ இந்தியா துவக்க விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க டெல்லி சென்ற தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிவிட்டு, தமிழ்நாடு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் என அவரது தரப்பில் இருந்தும் அரசு சார்பாக மீண்டும் வலியுறுத்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எட்டு பேர் கொண்ட அனைத்துக் கட்சியின் எம்பிக்கள் குழு கடந்த ஜனவரி 13ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வௌ்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்.

ஆனால் தற்போது வரையில் தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. மேலும் வெள்ள நிவாரண தொகையை தொடர்ந்து கேட்டு வலியுறுத்தும் போதேல்லாம், தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுபோன்ற சூழலில் நேற்று முன்தினம் வேலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசுக்கு எதிராக மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும், அதேப்போன்று தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு இறுதியில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த பெரு மழை காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவும், நிவாரணம் வழங்கவும் சுமார் ரூ.37,907 கோடி நிதி கேட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் இதுதொடர்பான முழு விவரங்களும் ஒன்றிய நிதி அமைச்சகத்திடமும் அளிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று வெள்ள பாதிப்புகளை ஒன்றிய ஆய்வு குழுவும் பார்வையிட்டு சென்றது. ஆனால் தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கு தேவையான வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க முடியாத சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்றிய அரசின் இதுபோன்ற செயல்பாடு என்பது இந்திய ஜனநாயகம் மற்றும் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

மேலும் இது நாட்டின் குடிமகன்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். அதேப்போன்று ஒரு மாநிலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் போது அதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது என்பது பேரிடர் மீட்பு கொள்கை விதிகளை திட்டமிட்டு மீறும் செயல். இது மட்டுமில்லாமல், நிதி கூட்டாட்சியை நசுக்குவது போன்றதாகும். ஒன்றிய அரசின் இதுபோன்ற செயல்பாடு தொடர்ந்து நீடித்தால் அது மாநில வளர்ச்சி மற்றும் மக்களின் மனநிலையை பாதிப்படைய செய்யும்.

எனவே தமிழ்நாட்டுக்கு தேவையான வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதைத்தவிர முதற்கட்டமாக இடைக்கால அவசர நிவாரண நிதியாக ரூ.2000 கோடியை விரைந்து உடனடியாக விடுவிக்கவும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவசர உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த மனுவை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக அடுத்த ஒரு சில தினங்களில் பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* வழக்கு தொடர்ந்த இரண்டாவது மாநிலம்
பேரிடர் நிவாரண நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ஒன்றிய அரசுக்கு எதிராக தற்போது கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருக்கும் காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றதில் முதலாவதாக வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேப்போன்று கேரளா அரசை பொருத்தமட்டில், கடன் வாங்கும் விவகாரத்தில் உச்ச வரம்பை நிர்ணயித்த ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post வெள்ள பாதிப்பு நிவாரணம் தராமல் இழுத்தடிப்பு ரூ.2000 கோடி நிதி கோரி தமிழக அரசு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது; ஒன்றிய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: