பிரசார விளம்பரங்களில் விதிமீறல்; பாஜக மீது காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பாஜக வெளியிடுவதாக, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் வீடியோ வடிவில் பிரசார விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் பாஜகவின் பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியை அவமதித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பவன் கெரா மற்றும் குர்தீப் சப்பல் ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, நேற்று தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் புகார் மனுவை அளித்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பாஜக வெளியிட்டு வருகிறது. எனவே இதுபோன்ற கீழ்தரமான பிரசாரத்தை தயாரித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அதை திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகளை வெளியிடவும் தேர்தல் கமிஷனிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடைபெறும் ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது குறித்தும் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது’ என்றார்.

The post பிரசார விளம்பரங்களில் விதிமீறல்; பாஜக மீது காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.

Related Stories: