வேலூர், ஏப்.3: வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் உள்ளனர். ஆனால் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. அதைத்தொடர்ந்து, 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 30ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணி கட்சி சார்பில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் உட்பட மொத்தம் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 28ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 37 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனு வாபஸ் வாங்க இறுதி நாளில் 6 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். வேலூர் மக்களவை தொகுதியில் 31 பேர் இறுதி செய்யப்பட்டு, தேர்தலில் களத்தில் உள்ளனர். கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், தலைவர்கள் பிரசாரம், கிராமம், கிராமமாக வேட்பாளர்கள் பிரசாரம், வாகன பிரசாரம் உள்ளிட்டவை நடந்து வருகிறது.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 22 பேர் களத்தில் இருந்தும் ஒரு சிலரை தவிர்த்தும், மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எந்தவித பிரசாரத்திலும் ஈடுபடுவதை காண முடியவில்லை. அனைத்து ஊர்களிலும் வாக்காளர்களிடம் குறைந்த பட்சம் துண்டு பிரசுரம் கொடுக்கும் பணியில் கூட ஈடுபடவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்தது, சின்னம் ஒதுக்கீடு கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சார்பில் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டங்களில் மட்டுமே இவர்களை காண முடிகிறது. வேறு எவ்வித தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதில்லை.
நேரடியாக சுயேட்சை வேட்பாளர்கள் என்றில்லாமல் ஏதேனும் அமைப்பின் பெயரிலும், இவர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் சார்ந்த தேர்தலில் மக்களை சந்திக்காமல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு என்ன காரணம் என வாக்காளர்கள் குழம்பி வருகின்றனர். வேட்பாளராக போட்டியிட்டால் பூத் ஏஜெண்டாக நம் சார்பில் ஒருவர் இருக்கலாம். எனவே கட்சி ேவட்பாளர்களே தங்களுடைய ஆட்களை வாக்குச்சாவடிகளில் இருக்க வைக்க இதுபோல் சுயேட்சை வேட்பாளர்களை நிற்க வைக்கின்றனர் என ஒரு வேட்பாளர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவதால் இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளவே வேட்பு மனு தாக்கல் செய்ததாக மற்றொரு வேட்பாளர் கூறினார்.
The post பிரசாரத்தில் ஈடுபடாத சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் appeared first on Dinakaran.