400 இடங்களில் வெற்றி என்பது பாஜவின் ஆணவம்: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: காங்கிரஸ் உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வருமான சச்சின் பைலட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: மக்களவை தேர்தலில் 400 இடங்களில் வெற்றி என பாஜ கோஷமிடுவது ஆணவத்தின் வௌிப்பாடு. அவர்களுக்கு 400 இடங்களில் வெற்றி என்ற நம்பிக்கை இருந்தால், காங்கிரஸ், பிற கட்சிகளில் இருந்து ஆட்களை ஏன் எடுக்க வேண்டும்? கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றிய அறிக்கையை பாஜ முதலில் வௌியிட வேண்டும். ராமர் கோயில் ஒரு அரசாங்கத்தாலோ, கட்சியாலோ கட்டப்படவில்லை. மாறாக அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கட்டப்பட்டது. ஆனால் ராமர் கோயில் கட்டியதை உணர்ச்சிகர அரசியலாக்கும் தந்திரத்தை பாஜ செய்து வருகிறது. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அவரை ஒரு கட்சியினர் மட்டும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.

இந்து, முஸ்லிம், கோயில், மசூதி பிரச்னைகளை அடிப்படையாக கொண்ட தேர்தலை இந்திய வாக்காளர்கள் விரும்பவில்லை. சிறந்த பொருளாதார கொள்கை, பணவீக்கம் குறைப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம், விவசாயிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர். வரும் தேர்தலில் அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாய நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்னைகளில் பாஜவுக்கு மக்கள் பாடம் கற்று தருவார்கள். தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக, வௌிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான களத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.இவ்வாறு கூறினார்.

The post 400 இடங்களில் வெற்றி என்பது பாஜவின் ஆணவம்: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: காங்கிரஸ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: