இந்தியா முழுவதும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் ரத்து: தமிழகத்தில் 6 சேவைகள் ரத்து; பயணிகள் அவதி; டிஜிசிஏ விசாரணை

சென்னை: இந்தியா முழுவதும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை வழங்கி வருகிறது. மும்பையில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இந்நிறுவன விமானம், டெல்லியில் இருந்து நேற்று இரவு 8.20 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விமானம், சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம், இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 விமானங்கள் ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டன.

மேலும் மும்பையில் இருந்து பகல் 12 மணிக்கு கோவை வந்துவிட்டு, மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு மும்பை புறப்பட்டு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் தரப்பில் விசாரித்த போது, நிர்வாக காரணங்களுக்காக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதேசமயம் விமானிகள், விமான பொறியாளர்கள் மற்றும் விமான ஊழியர்கள் போதுமான அளவு பணிக்கு வராததாலும், திடீர் மருத்துவ விடுப்பு எடுத்ததுமே இந்த விமானங்கள் ரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள டிஜிசிஏ விசாரணை மேற்கொண்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post இந்தியா முழுவதும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் ரத்து: தமிழகத்தில் 6 சேவைகள் ரத்து; பயணிகள் அவதி; டிஜிசிஏ விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: