மேட்ச்-பிக்சிங் என பேசியதற்காக ராகுல் மீது நடவடிக்கை கோரி தேர்தல் கமிஷனில் பாஜ புகார்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி சில கோடீஸ்வர தொழிலதிபர்களுடன் இணைந்து மேட்ச்-பிக்சிங் செய்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறார். அவ்வாறு பாஜ வென்று விட்டால், அரசியலமைப்பையே மாற்றிவிடுவார்கள்’ என்றார்.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜ தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் கொண்ட பாஜ பிரதிநிதிகள் குழு, ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் நேற்று புகாரளித்துள்ளது. அதில், ராகுல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருக்கு எதிராக வழக்கு பதிய உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஹர்தீப் சிங், ‘‘அரசியலமைப்பை பாஜ மாற்றிவிடும் என பேசியது மிகவும் ஆட்சேபனைக்குரியது. அது தேர்தல் நடத்தை விதியை மீறுவது மட்டுமல்ல, தேர்தலில் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும்’’ என்றார். இதே போல, மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் சாதியை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பியூஸ் பாண்டா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாஜ குழு புகாரளித்தது.

The post மேட்ச்-பிக்சிங் என பேசியதற்காக ராகுல் மீது நடவடிக்கை கோரி தேர்தல் கமிஷனில் பாஜ புகார் appeared first on Dinakaran.

Related Stories: