காங்கிரஸ் கிண்டல் செய்ததால் அவசர அவசரமாக கூடிய பா.ஜ தேர்தல் அறிக்கை குழு

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரித்து முடித்து ஒரு சில அறிவிப்புகளும் வந்துவிட்டன. முழு தேர்தல் அறிக்கை ஏப்.5ல் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஆளும் பாஜ கடந்த சனிக்கிழமை தான் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையே அமைத்துள்ளது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை கட்சித்தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார். இதை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்தது. பாஜகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று அவசர அவசரமாக நடந்தது. நிர்மலா சீதாராமன் உள்பட 8 ஒன்றிய அமைச்சர்கள், மூன்று மாநில முதல்வர்கள் உள்பட பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் திட்டத்தை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் இருந்து 5.45 லட்சம் பரிந்துரைகள் கிடைத்துள்ளன. அனைத்து ஆலோசனைகளும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டு, குழுவின் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்றார்.

The post காங்கிரஸ் கிண்டல் செய்ததால் அவசர அவசரமாக கூடிய பா.ஜ தேர்தல் அறிக்கை குழு appeared first on Dinakaran.

Related Stories: