ரூ.3567 கோடி வரிபாக்கி விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நடைபெறுவதால் வரி பாக்கி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி அளித்துள்ளது.  வரி பாக்கி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருமான வரித்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வரப்படுகிறது. இதில் முன்னதாக கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.1745 கோடி வரிபாக்கி வசூலிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. குறிப்பாக மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் ரூ.3,567 கோடி வரி நிலுவை செலுத்த வேண்டும் வருமான வரித்துறை தரப்பில் இருந்து புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை என்பது எதிர்கட்சிகளை ஒழிக்கும் தீவிரவாத செயலுக்கு ஒப்பானது என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையின் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் பி.வி.மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,\\”வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா \” தற்பொழுது மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். குறிப்பாக ரூ.3,567 கோடி வரி நிலுவை செலுத்த வேண்டும் என்று எந்தவித நிர்பந்தமும் செய்ய மாட்டோம். எனவே இதுதொடர்பான வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு பிறகு ஒத்திவைத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி,\” ஏற்கனவே இதே விவகாரத்தில் இரண்டு நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக புதிய நோட்டீஸ் வருமான வரித்துறையால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை வருமான வரித்துறையை கையில் வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து \\”வரி பாக்கி விவகாரத்தில் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த விதமான கடும் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று வருமான வரித்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கூறியதை பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post ரூ.3567 கோடி வரிபாக்கி விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி appeared first on Dinakaran.

Related Stories: