400 கிடக்குது… முதல்ல 200ல வெற்றி பெற்று காட்டுங்கள்: பாஜவுக்கு மம்தா சவால்

கிருஷ்ணாநகர்: மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டுமென்ற பாஜ கூட்டணியின் இலக்கை கேலி செய்த மம்தா, ‘முதலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று காட்டுங்கள்’ என சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு சமீபத்தில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். தற்போது காயம் குணமான நிலையில் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி உள்ளார்.

காயத்திற்குப் பின் முதல் முறையாக கிருஷ்ணாநகரில் நேற்று நடந்த பேரணியில் மம்தா பேசியதாவது: பாஜ கூட்டணியின் இலக்கு 400 தொகுதி என்கின்றனர். முதலில் 200 தொகுதிகளை தாண்டிக் காட்டுங்கள். இதை எனது சவாலாக கூறுகிறேன். மேற்கு வங்கத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அவர்கள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெற்றி இலக்காக நிர்ணயித்தார். ஆனால் 77ல் மட்டுமே ஜெயிக்க முடிந்தது நினைவிருக்கும்.

மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் குடியுரிமை பெற விண்ணப்பித்தால் நீங்கள் வெளிநாட்டவராக முத்திரை குத்தப்படுவீர்கள். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள். சிஏஏவில் யாரும் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா பாஜவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால், அவர் மீது அவதூறு செய்யப்பட்டு மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 400 கிடக்குது… முதல்ல 200ல வெற்றி பெற்று காட்டுங்கள்: பாஜவுக்கு மம்தா சவால் appeared first on Dinakaran.

Related Stories: