நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள் கூட்டத்தில் மோதல்: நெஞ்சில் கை வைத்து தள்ளினார் பாஜக மாவட்ட செயலாளர்: போலீசில் பெண் நிர்வாகி, பரபரப்பு புகார்

சென்னை: பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் தன்னை மாவட்ட செயலாளர் நெஞ்சில் கை வைத்து தள்ளியதாக பெண் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் அப்பு தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற பாஜ கட்சியின் வேட்பாளருக்கு பணியாற்றுவது தொடர்பாக 110வது வட்ட செயல் வீர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மத்திய ென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார்.

அப்போது தேர்தல் பிரசார வியூகம் அமைப்பது தொடர்பான பணிகள் மாவட்ட துணை தலைவர் மஞ்சு பார்கவிக்கு(38) ஒதுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலாளர் ஹரிஹரன்(38) தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து மாவட்ட துணை தலைவர் மஞ்சு பார்கவி தரப்புக்கும், மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட துணை தலைவர் மஞ்சு பார்கவி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனக்கு தேர்தல் பணி பொறுப்பு வழங்கியதற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தகராறு செய்து, பெண் என்றும் பாராமல் கட்சியினர் முன்னிலையில் எனது தோள்பட்டை மற்றும் நெஞ்சில் கையை வைத்து தள்ளி மானபங்கப்படுத்திவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 25ம் தேதி மத்திய சென்னை தொகுதி பாஜ வேட்பாளர் வினோஜ் வேட்பு மனு தாக்கல் செய்த போது, அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை அழைத்து வந்ததாக கணக்கு காட்டி பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகறாரில் மஞ்சு பார்கவி மாவட்ட செயலாளர் மீது புகார் அளித்தது தெரியவந்தது. இருந்தாலும் போலீசார் செயல் வீரர்கள் கூட்டம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள் கூட்டத்தில் மோதல்: நெஞ்சில் கை வைத்து தள்ளினார் பாஜக மாவட்ட செயலாளர்: போலீசில் பெண் நிர்வாகி, பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: