தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் நன்றி: திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை

சென்னை : திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கை: 17வது நாடாளுமன்ற தேர்தலின் போது தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் நடைபெற்ற ஒன்றிய மாநில அரசுகளின் ஆயிரக்கணக்கான கோடிகளில் மேற்கொள்ளப்பட்ட பல வளர்ச்சிப் பணிகளில் எந்த லஞ்சலாவண்யங்களிலும் நான் ஈடுபடாமல் துணை நின்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். ஜாதி மத எல்லைகளை கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என அனைவரும் இத்தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்கிற போது என் மீது காட்டிய அளப்பரிய பாசமும், அன்பும் என் உள்ளம் முழுவதும் நிறைந்து என்றென்றும் பசுமையாய் நிலைத்து நினைவில் இருக்கும்.

இத்தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத்தொகுதி மக்களுக்காக எனது பணி எப்போதும் தொடரும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டபோது உதவிய அனைத்து பெருமக்களுக்கும் எனது கோடான கோடி நன்றி. இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘தர்மத்தின் வாழ்வுதனை, சூது கவ்வும், தர்மம், மறுபடியும் வெல்லும்’.

The post தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் நன்றி: திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: