அப்போ கட்சி… இப்போ தொகுதி… சரத்பவார் மகளை எதிர்த்து அஜித்பவார் மனைவி போட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் சரத்பவார் மகளை எதிர்த்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா நிறுத்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார் கையில் இருந்து அஜித்பவார் கைப்பற்றினார். அதை தொடர்ந்து அவர்களது பாரம்பரியமான பாராமதி தொகுதி குறித்த சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் சரத்பவார் கட்சிக்கான 5 தொகுதி வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சரத்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் மீண்டும் சுப்ரியா சுலே நிறுத்தப்பட்டுள்ளார். அஜித் பவார் முகாமில் இருந்து அணி மாறி வந்த நிலேஷ் லங்கே எம்எல்ஏ அங்குள்ள அகமதுநகர் தொகுதி வேட்பாளராகவும், அமோல் கோல்ஹே மீண்டும் ஷிரூர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி தொகுதியில் பாஸ்கர் பாக்ரேவும், வார்தா தொகுதியில் அமர் காலேவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவை தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. சுப்ரியா சுலே பெயரை சரத்பவார் கட்சி அறிவித்த சில மணி நேரத்தில் பாராமதி தொகுதி வேட்பாளராக தனது மனைவியை நிறுத்தி உள்ளார் அஜித்பவார். இதுதொடர்பாக சுனேத்ரா கூறுகையில்,’பாராமதியில் நடக்கும் மோதல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளுக்குள் உட்பட்டது. இது குடும்பத்தில் நடக்கும் மோதல் அல்ல. இந்த நாள் எனக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள். நான் தேர்தலில் போராடும் திறன் கொண்டவனாக கருதியதற்காக பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சிவசேனா, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. சுப்ரியா சுலேவை எதிர்கொள்வது பற்றி வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்’ என்றார்.

The post அப்போ கட்சி… இப்போ தொகுதி… சரத்பவார் மகளை எதிர்த்து அஜித்பவார் மனைவி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: