எடப்பாடி பொதுச்செயலாளராக இருப்பது சந்தேகமே? 2024 எம்பி தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது: பாஜ பொதுச்செயலாளர் திட்டவட்டம்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் நேற்று மேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 3ம் இடத்தையே பிடித்து மிகப்பெரிய சரிவை சந்திக்கும். 2024 எம்பி தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. கட்சி தோற்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருப்பாரா என்பது சந்தேகம் தான். அதிமுக தான் சர்வ வல்லமை படைத்த கட்சியாச்சே? ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட எஃகு கோட்டை என்று கூறுகிறீர்களே? என்றைக்கு நீங்கள் ஒன்றரை கோடி ஓட்டு வாங்கி உள்ளீர்கள்.

ஜெயலலிதா கூட்டணியே வேண்டாம் என தனித்து போட்டியிட்டார்களே? உங்களால் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியுமா? எடப்பாடி ஒன்றும் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல. கட்சி எவ்வளவு பெரிய சரிவை சந்தித்தாலும், அவர்களால் அதை மீட்க முடியும். எடப்பாடியால் தோல்விக்கு பிறகு அந்த கட்சியை சரிவில் இருந்து மீட்க முடியாது. அவர் ஒன்றும் ஆளுமையானவர் அல்ல. ஆளுமை இல்லாத தலைவர். சரிவை சந்தித்த பிறகு அதிமுகவில் தொண்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். அதிமுகவில் மோடியைத் தவிர வேறு யாரையும் பிரதமர் என கூற முடியுமா? ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது மோடியா, லேடியா எனக் கேட்டார். அதுபோன்ற துணிச்சல் எடப்பாடிக்கு இருக்கா? என்ன அவர் கட்சி நடத்துகிறார்.

* நோட்டாவுக்கு கீழுள்ள பாஜ அதிமுகவை பற்றி பேசுவதா? வைகைச்செல்வன் பதிலடி
ராம.ஸ்ரீனிவாசன் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதிலடி கொடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அதிமுகவை அழிக்கவோ, சிதைக்கவோ, வேறு எந்த ரூபத்திலும் அதை முடக்கவோ எந்த ஒரு காலத்திலும் முடியாது. இந்த இயக்கம் 7 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்த இயக்கம் நாடளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சி என்கிற நிலையில் உள்ளது. மக்களோடு இணைந்து, இசைந்து இருக்கக் கூடிய இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தை சங் பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இருக்கிறவர்கள், ஸ்ரீனிவாசனை போன்றவர்கள் அதிமுகவை பற்றி பேசுவதற்க்கு அருகதையற்றவர்கள், தகுதியற்றவர்கள். தூக்கி எரிந்து விடுவதற்கு அதிமுக என்ன குச்சியா அல்லது வேறு ஏதாவது ஜடப் பொருளா? உயிருள்ள பலபேருக்கு மேல் உள்ள அதிமுக தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிற ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கம், மேலும், மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அடிக்க, அடிக்க பந்து உருண்டும், அறுக்க, அறுக்க வைரம் மின்னும் என்பதைப் போல அதிமுகவிற்கு மேலும், மேலும் எத்தனை சோதனை வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வெற்றி சரித்திரம் படைக்கும். நோட்டாவுக்கும் கீழ் இருக்கிற பாஜ, 7 முறை ஆட்சியைப் பிடித்துள்ள அதிமுகவை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post எடப்பாடி பொதுச்செயலாளராக இருப்பது சந்தேகமே? 2024 எம்பி தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது: பாஜ பொதுச்செயலாளர் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: