ரூ.1823 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: கெஜ்ரிவால் கைது கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணி

புதுடெல்லி, மார்ச் 31: ஒன்றிய பாஜ அரசின் வரி பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் மெகா பேரணி இன்று நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை நிதி ரீதியாக ஒடுக்குவதற்கு ஒன்றிய பாஜ அரசு வருமான வரித்துறை மூலமாக நடவடிக்கை எடுப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஏற்கனவே ரூ.210 கோடி வருமான வரி அபாரதத்தை வசூலிக்க சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரூ.1,823 கோடி வரி அபராதம் செலுத்த வேண்டுமென காங்கிரசுக்கு வருமான வரித்துறை நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.

காங்கிரஸ் மட்டுமின்றி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங். கட்சிகளுக்கும் ஐடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகளை நேர் வழியில் சந்திக்க முடியாத பாஜ அரசு, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி குறுக்கு வழியில் முடக்கப் பார்ப்பதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய பல நகரங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒன்றிய பாஜ அரசின் வரி பயங்கரவாதத்தை கண்டித்து கோஷமிட்டனர். எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வருமான வரித்துறை, பாஜவின் வருமான வரி விதிமுறை மீறல்களுக்கு நியாயப்படி ரூ.4,600 கோடி அபராதம் விதிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக போராட்டத்தில் தொண்டர்கள் கோஷமிட்டனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் நடந்த பயங்கரமான ஊழலை மறைக்கவும் இதுபோல எதிர்க்கட்சிகள் மீது பொய்யான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, டெல்லி அரசின் மதுபான கொள்கை விவகாரத்தில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று மெகா பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ரிடிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மெகா பேரணி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உரையாற்றுவார்கள். இது வெறும் தனி ஒரு மனிதருக்கான பேரணி அல்ல. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதற்கான பேரணி. இதில் இந்தியா கூட்டணியின் 28 கட்சிகள் பங்கேற்க உள்ளன’’ என்றார்.

The post ரூ.1823 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: கெஜ்ரிவால் கைது கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணி appeared first on Dinakaran.

Related Stories: