கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை மேலும் 4 நாள் விசாரிக்க அனுமதி: நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி கைது செய்தது. டெல்லி நீதிமன்றம் அவரை 6 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. 6 நாள் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பாக கெஜ்ரிவால் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, ‘‘விசாரணையில் கெஜ்ரிவால் எந்த கேள்வியும் நேரடியாக பதில் அளிக்க மறுக்கிறார். எனவே மேலும் 7 நாள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால் கூறியதாவது: ரூ.100 கோடி ஊழல் நடந்திருந்தால், அந்த பணம் எங்கே போனது? நீங்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் என்னை காவலில் வைத்திருங்கள் பரவாயில்லை. அமலாக்கத்துறை ஆம் ஆத்மியை நசுக்கப் பார்க்கிறது.

இந்த வழக்கில் கைதான சரத் ரெட்டி 7 முறை வாக்குமூலம் அளித்துள்ளார். முதல் 6 வாக்குமூலத்தில் என்னை பற்றி எதுவும் சொல்லவில்லை. 7வது வாக்குமூலத்தில் என்னை பற்றி பேசியதும் அவருக்கு ஜாமீன் தரப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியில் வந்ததும் பாஜவுக்கு ரூ.55 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை தந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த வழக்கில் அமலாக்கத்துறை 31 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் 4 இடத்தில் மட்டுமே என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் 4 அறிக்கைகள் மட்டும் ஒரு முதல்வரை கைது செய்ய போதுமானதா?  இவ்வாறு கெஜ்ரிவால் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவால் உண்மையை வெளியிடப் போகிறார் என அவரது மனைவி சுனிதா நேற்று முன்தினம் கூறியிருந்த நிலையில் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் பல தகவல்களை நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

* முதல்வராக நீடிக்க எதிர்த்த மனு தள்ளுபடி
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இது நீதிமன்ற தலையீட்டுக்கு அப்பாற்பட்ட விவகாரம். சட்டப்படி ஜனாதிபதியோ அல்லது ஒன்றிய அரசு தான் இது குறித்து பரிசீலக்க முடியும்’’ எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஈடி விசாரணையில் துன்புறுத்தப்படுகிறார்
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு நேற்று வந்திருந்த கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறுகையில், ‘‘எனது கணவருக்கு உடல் நிலை சரியில்ல. சர்க்கரை அளவு நிலையாக இல்லை. அவர் மிகவும் துன்புறுத்தப்படுகிறார். இதற்கு மக்கள் சரியான பதில் அளிப்பார்கள்’’ என்றார்.

ஆளுநர் கருத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி
அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே கெஜ்ரிவால் தனது அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில், ‘‘சிறையில் இருந்தபடி யாரும் டெல்லி அரசை நடத்த முடியாது’’ என அம்மாநில துணை நிலை ஆளுநர் சக்சேனா நேற்று முன்தினம் கூறினார். இது குறித்து நீதிமன்ற வளாகத்தில் கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இது அரசியல் சதி. இதற்கு மக்கள் பதிலடி தருவார்கள்’’ என்றார்.

இதற்கிடையே, டெல்லி பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா அளித்த பேட்டியில், ‘‘டெல்லி மிகப்பெரிய அரசியலமைப்பு நெருக்கடியில் உள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் அவரது கட்சியிலிருந்து வேறு யாரையாவது முதல்வராக நியமித்திருக்கலாம். உலகில் எங்காவது ஒரு மூலையில், சிறையிலிருந்து அரசை நடத்தும் ஒரு உதாரணத்தை காட்டுங்கள் பார்ப்போம். எனவே உங்களிடம் அரசியல் நெறிமுறை மிச்சமீதியிருக்குமானால், உடனே முதல்வர் பதவியிலிருந்து விலகுங்கள்’’ என்றார்.

The post கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை மேலும் 4 நாள் விசாரிக்க அனுமதி: நீதிமன்றத்தில் காரசார வாதம் appeared first on Dinakaran.

Related Stories: