100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி இயக்கம்: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

பூந்தமல்லி: 100 சதவீதம் வாக்களிப்பு வலியுறுத்தி பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி இயக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 2024 மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதன்படி, பூந்தமல்லி நகராட்சி சார்பில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருமழிசை கூட்டு சாலை பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கர் தலைமை தாங்கினார். 2 கி.மீ தூரத்திற்கு நீண்டிருந்த மனித சங்கிலி இயக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கைகளை கோர்த்தபடி ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர்.

முன்னதாக பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் வரையப்பட்டிருந்த மெகா சைஸ் வண்ணக்கோலத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார். திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் லதா, மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* நேர்மையான நபரை தேர்வு செய்ய வேண்டும்
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரப சங்கர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, வாக்களிப்பது ஜனநாயக கடமை. நேர்மையாக, நியாயமாக, சரியான நபரை தேர்ந்தெடுக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அதுவும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் கருமாரியப்பன் உட்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி இயக்கம்: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: