ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர்: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகள் வைப்பது, ராட்சத பலூன்கள் பறக்க விடுவது, கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர் பேரணி நடத்துவது ஆகியவை நடைபெற்று வருகிறது.

அதே போல் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பொது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மற்றும் மருந்து துறையின் கடம்பத்தூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக அனைவரும் வாக்களிப்போம், 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செய்வோம் என்ற விழிப்புணர்வு முகாமை கடம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் டில்லி பாய், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் ச.மோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு முகாமிற்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜன் தலைமை தாங்கி மனித சங்கிலி உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவத்தில் பணிபுரியும் பெண் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பொது சுகாதார நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக மனித சங்கிலி நிகழ்ச்சி பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் சுகாதார பகுதி மாவட்டத்தின் கீழ் செயல்படும் எல்லாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் பிரியாராஜ் அறிவுறுத்தலின்பேரில், மனித சங்கிலி மூலம் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்வோம் என முதன் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவத்தில் பணிபுரியும் பெண் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கினர்.

The post ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: