பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை நீட்டிப்பு

பெங்களூரு: கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவு வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் ஆகிய நகைகளை மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் கடந்த பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவற்றை வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். அம்மனு மார்ச் 5ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசிடம் நகைகளை ஒப்படைக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு நேற்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை விதித்து உத்தரவிட்டது தொடரும் என்றார். இந்நிலையில் உயர்நீதிமன்ற தடையுத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: