குடியரசு தலைவர் முதல் முதலமைச்சர் வரை கண்ட தென் சென்னையின் தேர்தல் வரலாறு: வி.ஐ.பி. தொகுதியில் வெல்ல போவது யார்?

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1957ல் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முக்கிய தொகுதியாக ‘மெட்ராஸ் சவுத்’ என அழைக்கப்பட்ட தென்சென்னை தொகுதிக்கு முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டது. அன்றில் இருந்து 16 நாடாளுமன்ற தேர்தல்களை கண்ட இந்த தொகுதியின் அரசியல் வரலாறு நீண்ட நெடிய பயணத்தை கொண்டுள்ளது. சென்னையின் 3 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட ஒரே தொகுதி தென்சென்னைதான். தமிழகத்தில் உள்ள 32 பொதுத்தொகுதிகளில் தென் சென்னையும் ஒன்றாக திகழ்கிறது. 2008க்கு முன்பு வரை தாம்பரம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்த தென்சென்னையில், தொகுதி மறுசீரமைப்புக்கு பின், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. கடந்த 1957 தேர்தலில் முதல்முறையாக இந்த தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் களம் கண்டனர். அங்கு முதல் தேர்தலில் வெற்றி வாகை சூடியவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இவர் தான் பின்னாளில் இந்தியாவின் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார்.

நட்சத்திர தொகுதியான இங்கு முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலிமாறன், முன்னாள் குடியரசு தலைவர் வெங்கட்ராமன், நடிகை வைஜெயந்தி மாலா ஆகியோர் வெற்றிவாகை சூடியுள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை முற்பட்ட வகுப்பினர், மீனவர்கள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம். இதுதவிர, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஐ.டி நிறுவனங்கள், எப்போதும் பரபரப்பாக இருக்கும் தி.நகர் மற்றும் கோயம்பேடு வணிக சந்தைகள், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட தென்சென்னை தொகுதி 2024க்கான 17வது நாடாளுமன்ற தேர்தலை ஏப்.19ம் தேதி சந்திக்கின்றது. இந்த தேர்தலில் திமுக தரப்பில் 2வது முறையாக தமிழச்சி தங்கபாண்டியன் களம் காண்கிறார். அதேபோல், அதிமுக சார்பில் ஜெயவர்த்தனும், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் தமிழ்ச்செல்வியும் போட்டியிடுகின்றனர்.

அதேசமயம் மும்முனை போட்டிதான். யார் தென்சென்னை தொகுதியை கைப்பற்றுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. தமிழச்சி தங்கபாண்டியனை பொறுத்தவரை நாடாளுமன்றத்தின் ஆக்டிவான உறுப்பினர். இவர் 8 தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்திருக்கிறார். இது தவிர, 292 கேள்விகளை எதிர்க்கட்சியாக முன்வைத்ததுடன் 63 விவாதங்களிலும் பங்கேற்றுள்ளார். மேலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் குரல் கொடுத்து வருவதை முன் நிறுத்தி அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் 26வது வயதில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே இளம் வயது எம்.பி என்ற பெருமையை பெற்றிருந்தார். இருப்பினும், 2019தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், மிகப்பெரிய தோல்வியை அவருக்கு ஏற்படுத்திக்கொடுத்தது.

வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்ததன் விளைவாக ஜெயவர்தன் இந்த தேர்தலில் பல்வேறு வியூகங்களுடன் பரப்புரையில் களம் கண்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அறிவித்தவுடன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மோடியின் தயவுடன் தென்சென்னை தொகுதியில் பாஜ சார்பில் களம் கண்டுள்ளார். கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்ததையடுத்து, பாஜ மேலிடத்தின் கருணையால், ஆளுநர் பதவிகளை தன்வசப்படுத்தினார். அரசியலில் இருந்து விலகி இருந்த அவரை பாஜ, வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் தென்சென்னையில் களம் இறக்கி உள்ளது. பாஜவிற்கு விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூரில் கணிசமான ஓட்டு வங்கி இருந்தாலும், மற்ற இடங்களில் ஆட்கள் இல்லாதது ஏமாற்றம்தான். பிரசார களத்தில் வேட்பாளர்கள் தங்களின் புகழுரைகளையும், சாதனைகளையும் விளக்கி கூறினாலும் வாக்களிக்கும் எஜமானர்கள் கையில் தான் வெற்றி, ேதால்வி உள்ளது.

9 முறை வென்ற திமுக

தென்சென்னையில் இதுவரை 9 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1962ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாஞ்சில் கே.மனோகரன் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு முதல் வெற்றியை தென்சென்னையில் தேடிக்கொடுத்தார். இதுமட்டுமின்றி, டி.ஆர்.பாலு தொடர்ந்து 4 முறை (1996, 1998, 1999, 2004) இந்த தொகுதியில் தன்னுடைய வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் தரப்பில் 5 முறையும், அதிமுக 3 முறையும் தென்சென்னையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

The post குடியரசு தலைவர் முதல் முதலமைச்சர் வரை கண்ட தென் சென்னையின் தேர்தல் வரலாறு: வி.ஐ.பி. தொகுதியில் வெல்ல போவது யார்? appeared first on Dinakaran.

Related Stories: