ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை தருவதாக பொய் கூறியது ஏன்? பாஜவுக்கு ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 2014 மக்களவை தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று பா.ஜ வாக்குறுதி அளித்தது. இதை குறிப்பிட்டு பாஜவிடம் கேள்வி எழுப்பி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து பாஜ மக்களை தவறாக வழிநடத்தியது. தற்போது நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பொய் சொன்னீர்களா என்று கேட்கிறார்கள். பாஜ உருவாக்கிய மாயை வலையை அறுத்து இளைஞர்கள் தங்கள் தலைவிதியை தாங்களாகவே மாற்றிக் கொள்ள வேண்டும். மோடி, உங்களிடம் வேலை வாய்ப்பு திட்டம் ஏதும் உண்டா? என்ற கேள்வியை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் கேட்கிறார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் கிராமங்களிலும் பாஜவினரிடம் மக்கள் கேட்கிறார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்குவதாக பொய் சொல்லப்பட்டது ஏன்?. ஆனால் 2024ல் ஆட்சியை பிடித்ததும் யுவ நீதியின் கீழ் வேலைவாய்ப்புப் புரட்சியை மேற்கொள்ள காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம். படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான வேலை வழங்கப்படும்.

இரண்டு சித்தாந்தங்களின் கொள்கைகளில் உள்ள வேறுபாட்டை அடையாளம் காண வேண்டிய தருணம் இது. இளைஞர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப காங்கிரசும், அவர்களை தவறாக வழிநடத்த பாஜவும் விரும்புகின்றன. இளைஞர்கள் தங்கள் தலைவிதியை தங்கள் கைகளால் மாற்றிக் கொள்ள வேண்டும். மாயை வலையில் சிக்காமல் நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சி கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை தருவதாக பொய் கூறியது ஏன்? பாஜவுக்கு ராகுல்காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: