அமெரிக்காவில் பரபரப்பு சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்தது: ஆற்றில் வாகனங்கள் மூழ்கி 7 பேர் மாயம்

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்ததில், வாகனங்கள் ஆற்றில் மூழ்கின. இதில் மாயமான 7 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 2.5 கிமீ நீள பிரான்சிஸ் ஸ்காட் கீ எனும் இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. துறைமுகத்தை இணைக்கும் இந்த பாலம் 4 வழி போக்குவரத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பாலத்தின் ஒரு தூணில் மோதியது. அடுத்த நிமிடமே பாலம் சீட்டு கட்டு போல் சரிந்து ஆற்றில் மூழ்கியது. சரக்கு கப்பலும் தீப்பிடித்தது. விபத்து நடந்த சமயத்தில் கன்டெய்னர் லாரிகள் உட்பட பல வாகனங்கள் பாலத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் பல வாகனங்கள் பாலத்துடன் சேர்ந்து ஆற்றில் மூழ்கின. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மூழ்கிய வாகனங்களில் சுமார் 7 பேர் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. இந்த பாலம் 1977ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாக பால்டிமோர் மேயர் பிராண்டன் கூறி உள்ளார்.

* பணியாளர்கள் 22 பேரும் இந்தியர்கள்
விபத்தை ஏற்படுத்திய கப்பல் ‘டாலி’ பால்டிமோரில் இருந்து இலங்கை கொழும்பு துறைமுகம் நோக்கி சரக்குகளை கொண்டு சென்றது. அதில் பணியில் இருந்த 22 ஊழியர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கப்பல் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

* 2 பேர் மீட்பு
இதற்கிடையே, ஆற்றில் நடந்த மீட்புப் பணியை தொடர்ந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பால்டிமோர் தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மிக நீண்ட பாலம் என்பதால் மீட்பு பணி சவாலாக இருப்பதாக மீட்புக்குழுவினர் கூறி உள்ளனர். அப்பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் பரபரப்பு சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்தது: ஆற்றில் வாகனங்கள் மூழ்கி 7 பேர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: