செஞ்சியகரம் பகுதியில் சேதமடைந்த நீர்வரத்து கால்வாய்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: செஞ்சியகரம் பகுதியில் சேதமடைந்து மண் தூர்ந்து காணப்படும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிபூண்டி அருகே கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை கிராமங்களை இணைத்து, அதிமுக ஆட்சியில் ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, கடந்த 2014ம் ஆண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களை அழித்து கால்வாய் அமைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால், அந்த தண்ணீர் தாமரைக்குப்பம் பகுதியிலிருந்து திருப்பி விடப்பட்டு, கரடி புத்தூர் வழியாக கண்ணன் கோட்டை நீர்தேக்கத்திற்கு செல்லும்.

இந்நிலையில் கடந்த நவம்பர் – டிசம்பரில் மிக்ஜாம் புயல் மழையால் தாமரைக்குப்பம் – கண்ணன் கோட்டை இடையில் செஞ்சியகரம் பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாய் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து, கால்வாயின் கரையோரத்தில் இருந்த மண் சரிந்து கால்வாய் தூர்ந்து விட்டது. இதனால், கால்வாயின் நுழைவு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அது மட்டுமல்லாமல் கரைகளும் ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கின்றன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது; கடந்த நவம்பர், டிசம்பரில் மிக்ஜாம் புயல் மழையால் செஞ்சியகரம் பகுதியில் கால்வாயின் சிலாப்புகள் உடைந்து, கரையோரம் உள்ள மண் சரிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கால்வாய் தரமற்ற முறையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செஞ்சியகரம் பகுதியில் சேதமடைந்த நீர்வரத்து கால்வாய்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: