மேலப்பேடு வரை பேருந்து இயக்கப்படாததால் ஆவடி பேருந்து நிலையம் முற்றுகை: மாற்று பேருந்தில் ஏற்றி வைத்து சமரசம்

ஆவடி: ஆவடி பேருந்து பணிமனையில் இருந்து சென்னை உட்பட புறநகர் பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவடியில் இருந்து மேலப்பேடு வரை செல்லும் தடம் எண் 61ஏ பேருந்து நாள் ஒன்றுக்கு 12 முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் முதல் அந்த பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனால், இரவு 7 மணி அளவில் அப்பகுதிக்குச் செல்லும் பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆவடி பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு பேருந்து நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஆவடி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஆவடியில் இருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண் 77 என்ற பேருந்து எண்ணை 61ஏ என மாற்றி பயணிகளை அந்த பேருந்தில் பயணம் செய்ய வைத்தது குறிப்பிடததக்கது.

The post மேலப்பேடு வரை பேருந்து இயக்கப்படாததால் ஆவடி பேருந்து நிலையம் முற்றுகை: மாற்று பேருந்தில் ஏற்றி வைத்து சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: