தமிழகத்தின் பசுமை பரப்பு 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எதுவும் தெரியாமல் மாநில தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார்: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: எதுவும் தெரியாமல் ஒரு மாநில தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார் என அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை – பஜார் சாலையில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து பேசியதாவது: தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து திமுக மூத்த நிர்வாகிகளையும், இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தலைமை தேர்தல் பணிமனையில் எப்போதும் 10க்கும் மேற்பட்ட சட்டவல்லுநர்கள் இருப்பார்கள். தேர்தல் முடியும் வரை இந்த பணிமனை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். தென் சென்னை வேட்பாளர் பிரசாரம் குறித்து அனைத்து தகவலும் இங்கு கிடைக்கும். கலைஞர் பிறந்தநாள் ஜூன் 3, தேர்தல் முடிவு ஜூன் 4 எனவே அந்த நாளில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்ற செய்தி கிடைக்க இருக்கிறது.

கோடைகாலம் என்பதால் வேட்பாளர் காலை மற்றும் மாலை நேரத்தில் மக்களை சந்திக்க அந்தந்த பகுதி நிர்வாகி சரியாக திட்டமிட்டு இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வருகின்ற செய்திக்கு எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் கோவையில் வெப்பம் 1.50 டிகிரி இருந்து 2 டிகிரியாக அதிகரித்து உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் பதில் அளித்துள்ளார். ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 1.50 டிகிரி இருந்து 2 டிகிரியாக உயர்த்த முடியுமா? இந்த அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று கேட்டு உள்ளார். இன்று உலக வெப்ப நிலை 1.45 டிகிரி தான் உள்ளது. இந்தியாவின் மையத்தில் 1.45 லட்சம் ஹெக்டேர் காடுகளை அழித்து பெரிய கார்பரேட் நிறுவனத்திற்கு பாஜ தாரைவார்த்தது. காடுகளை அழித்தவர்கள் வெப்பத்தை பற்றி பேசுவது எந்த வகையில் நியாயம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கேட்கிறார்.

ஒரு நாட்டின் பசுமை பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பசுமை பரப்பு தற்போது 23.7 சதவீதம் அதனை 25 சதவீதம் உயர்த்த 7.50 லட்சம் ஹெக்டேரில் மரம் நடுவோம் என முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். அண்ணாமலையிடம் கேட்கிறேன், வேறு எந்த ஒரு மாநில முதல்வராவது பிரதமர் உள்பட தேர்தல் அறிக்கையில் பசுமை பரப்பை உயர்த்துவோம் என்று அறிவித்து இருக்கிறார்களா? பசுமை பரப்பை உயர்த்துவோம் என்று அறிவித்த ஒரே தலைவர் நமது முதல்வர் தான். பசுமை இயக்கம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி. இது வரை தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சம் மரங்கள் நடப்பட்டு உள்ளது. எதுவும் தெரியாமல் ஒரு மாநில தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார். 17ம் தேதி வரை இதுபோன்று மேடையில் கூத்து கும்மாளம் இருக்கும். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசும் மேடை மக்களுக்கு தேவைப்படுவதை பேசும் மேடையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தின் பசுமை பரப்பு 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எதுவும் தெரியாமல் மாநில தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார்: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: