பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரு: : பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் தவான், பேர்ஸ்டோ களமிறங்கினர். பேர்ஸ்டோ 8 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வேகத்தில் கோஹ்லி வசம் பிடிபட்டார். தவான் – பிரப்சிம்ரன் சிங் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 25 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டன் 17 ரன், ஷிகர் தவான் 45 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, பஞ்சாப் கிங்ஸ் 12.1 ஓவரில் 98 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்தநிலையில், சாம் கரன் – ஜிதேஷ் ஷர்மா ஜோடி 5வது விக்கெட்டுக்கு அதிரடியாக 52 ரன் சேர்த்தது.

சாம் கரன் 23 ரன், ஜிதேஷ் ஷர்மா 27 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஷஷாங்க் சிங் 21 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் மேக்ஸ்வெல், சிராஜ் தலா 2, யஷ் தயாள், அல்ஜாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வென்றது. விராட் கோஹ்லி அதிகபட்சமாக 77 ரன் (49 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். தினேஷ் கார்த்தி 28 ரன், லோமர் 17 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபடா, ஹர்ப்ரீத் பிரார் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: