திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்


சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இன்று மாலை அவர் ராமநாதபுரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக முடிந்தது. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மக்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இது மக்களிடம் பேசும் பொருளாக இருந்து வருகிறது. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிட்ட கையொடு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதாவது, நேற்று தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இன்று அவர் தஞ்சை, நாகை தொகுதியிலும், 25ம் தேதி (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் அவர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை முதல் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்குகளை சேகரிக்க உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை துவக்குகிறார். மாலை 6 மணிக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும், இரவு 8.30 மணிக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலும், இரவு 9.15 மணிக்கு தேனியின் ஆண்டிப்பட்டி பகுதிகளும் அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் வடக்கு பகுதியிலும், காலை 11 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலும், மாலை 5 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு பகுதியிலும், மாலை 6.15 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், இரவு 7 மணிக்கு மதுரை வடக்கு பகுதியிலும், இரவு 7.45 மணிக்கு மதுரை மாநகர் புதூர் பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். 25ம் தேதி(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் பெரிய தூண், காந்தி சிலை பகுதியிலும், மாலை 6 மணிக்கு செய்யாறு மார்க்கெட் அருகிலும், இரவு 7 மணி வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலும், இரவு 8 மணிக்கு சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகிலும், இரவு 9 மணி திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து 26ம் ேததி காலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியிலும், மாலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும், 27ம் தேதி அரக்கோணம் தொகுதியிலும், மாலையில் பெரும்புதூர் தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் சூறாவளி பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

The post திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: