மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி

 

திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டம் நடத்தப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி வருகிறார்கள்.

இதற்கிடையே மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 78 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் தொடங்கி தெருமுனை பிரச்சாரம் வரை, அனைத்துக்கும் 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

கடைசி நேரத்தில் பதிவு செய்துவிட்டு, அனுமதி தரவில்லை என யாரும் கூறக்கூடாது. அதேபோல் பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு இடங்களுக்கும் மாற்று ஏற்பாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனையும் அரசியல் கட்சியினர் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் யார் முதலில் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தரப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்படுகிறது.

இனி தேர்தல் அறிவிப்புக்கு பின்பான அனுமதிகள் கணக்கில் கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட எந்த தனியார் சுவற்றிலும் சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது. ஊரக பகுதிகளில் கட்டிட உரிமையாளர்களின் அனுமதி பெற்று செய்து கொள்ளலாம். இதனை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

The post மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: