நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லையில் வாகன தணிக்கை தீவிரம்

 

நாகப்பட்டினம்,மார்ச் 20: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு புதுச்சேரி மாநில எல்லையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி அறிவித்தது. இதையடுத்து அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதியில் தலா 1 சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை போலீசார் தீவிரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மாநில எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் உள்ள சோதனை சாவடியில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிவிரைவு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அந்த வழியாக சென்ற வாகனங்களில் ஆய்வு செய்தனர். அதேபோல சட்டத்துக்கு புறமாக மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்றும் கண்காணித்து வருகின்றனர். இரண்டு மாநில எல்லையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் வைத்துள்ள பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு அந்த வாகனம் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சென்று வருகிறது என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லையில் வாகன தணிக்கை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: