கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்காவிட்டால் நானே வேட்பாளர்

தியாகதுருகம், மார்ச் 19: தியாகதுருகத்தில் நடைபெற்ற பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்கவில்லையென்றால் நானே வேட்பாளராக நிற்பேன் என அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் 56 வேட்பாளர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நேர்காணல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என இருந்தபோதிலும் கட்சியில் எந்த ஒரு பணியும் செய்யாத மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவரை நேர்காணலுக்கு அழைத்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது மாவட்ட செயலாளருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசுகையில் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்கவில்லையென்றால் அதிமுகவின் வேட்பாளராக நானே நிற்பேன் என சபதம் எடுத்துள்ளார். அதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்காத நிலையில் தனக்குத்தானே வேட்பாளராக அறிவித்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்காவிட்டால் நானே வேட்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: