தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: மும்பையில் பதுங்கியிருந்த பாஜ மாவட்ட தலைவர் கைது

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திடம் பணம்கேட்டு மிரட்டிய வழக்கில் மும்பையில் பதுங்கியிருந்த பாஜ மாவட்ட தலைவர் அகோரம் நேற்று கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக உள்ளவர், தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவரின் சகோதரர் விருத்தகிரி கடந்த மாதம் 25 ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவர், தன்னிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாகவும், ரூ.40 கோடி கொடுக்காவிட்டால், சமூக வலைத்தளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவதாகவும், கொலை மிரட்டல் விடுத்தனர்’ என்று அதில் கூறப்பட்டது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை நிவாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து ஆடுதுறை வினோத், சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை நிவாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், பதுங்கி இருந்த அகோரத்தை நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக மயிலாடுதுறைக்கு அழைத்து வருகின்றனர்.

The post தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: மும்பையில் பதுங்கியிருந்த பாஜ மாவட்ட தலைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: