குலசேகரத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறிய 11 டாரஸ் லாரிகள் சிறைபிடிப்பு

*டிரைவர்கள் தப்பியோட்டம்

குலசேகரம் : குலசேகரத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறிய 11 டாரஸ் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் சாலைகளில் செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் லாரி டிரைவர்கள் அதனை மதிப்பதே இல்லை. குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் நேரக்கட்டுப்பாட்டை மீறி காலியான டாரஸ் லாரிகள் செல்கின்றன.

8 மணி ஆனதும் சாரை சாரையாக வரிசையாக செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே டாரஸ் லாரிகளை இரவு 9 மணிக்கு மேல்தான் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் குலசேகரம் காவல்ஸ்தலம் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சீலன் தலைமையில் பொதுமக்கள் திடீரென திரண்டனர். அந்த வழியாக நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்த 11 டாரஸ் லாரிகளை அவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரம் காவல் நிலையத்தில் இருந்து ஒரு போலீஸ்காரர் வந்தார். அவர் 11 லாரிகளின் பதிவெண்களை எழுதிவிட்டு அனைத்தையும் காவல் நிலையம் கொண்டு வருமாறு அதன் டிரைவர்களிடம் கூறிவிட்டு சென்றார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் 3 லாரிகள் மட்டுமே காவல் நிலையம் சென்றன. மீதமுள்ள 8 லாரிகளின் டிரைவர்கள் போலீஸ் நிலையம் செல்வதுபோல் போக்குக்காட்டிவிட்டு மாற்றுப்பாதை வழியாக தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட 3 லாரிகளும் பகல் முழுவதும் அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் 3 லாரிகளின் டிரைவர்கள் அருமனையை சேர்ந்த ராஜன் (55), குமாரபுரம் பகுதியை சேர்ந்த வினு ராஜன் (32), நட்டாலம் பகுதியை சேர்ந்த வைகுண்ட ராஜன் (40) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தப்பியோடிய லாரிகளின் பதிவெண்களை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

குலசேகரம் காவல் நிலைய போலீசார் மண்டைக்காடு கோயில் கொடை விழா பாதுகாப்பு பணி உள்பட வெளிப்பணிகளுக்கு சென்று விட்டனர். இதனால் காவல் நிலையத்தில் இருந்து ஒரு போலீஸ்காரர் மட்டும் லாரிகளை பிடிக்க வந்துள்ளார். இதனால்தான் மற்ற லாரி டிரைவர்கள் ஏமாற்றிவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post குலசேகரத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறிய 11 டாரஸ் லாரிகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: