ஆதிதிராவிட மக்களுக்கு பாறை புறம்போக்கு நிலம் வழங்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சி.பி.கண்டிகை, மேட்டுக்காலனி ஆதி திராவிட மக்களுக்கு பாறை புறம்போக்கு நிலம் வழங்கக் கோரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சி.பி. கண்டிகை, மேட்டுக் காலனியில் 3 தலைமுறையாக ஆதிதிராவிட மக்கள் 7.43 ஏக்கர் பாறை புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்க இந்த நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நிலம் எடுத்தது போக மீதமுள்ள நிலத்தை ஆதி திராவிட மக்களுக்கு பிரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்த கோரிக்கைவை மனு அளித்தனர். இதே போல் முறைகேடாகவும், சாதிய ரீதியாகவும் செயல்படும் ஆர்.கே.பேட்டை வட்ட வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இந்த நிகழ்வின்போது வழக்கறிஞர் சுரேஷ், ஆர்.கே.பேட்டை ஒன்றியச் செயலாளர் சத்யா, மணவூர் முனுசாமி, திருவள்ளூர் அம்பி, திலக் உள்பட கிராம மக்கள் உடனிருந்தனர்.

The post ஆதிதிராவிட மக்களுக்கு பாறை புறம்போக்கு நிலம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: