மனோகர் லால் கட்டார் பதவி விலகினார்; அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி பதவியேற்றார்: கூட்டணி முறிவால் பாஜ அவசர முடிவு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பாஜ, ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக மனோகர்லால் கட்டார் பதவி வகித்தார். வரும் அக்டோபர் மாதம் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஜேஜேபி கட்சி தலைவரும், துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா, டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 10 தொகுதிகளில் ஜேஜேபி கட்சி 2 இடங்களை கேட்டது. ஆனால் ஒரு இடம் மட்டுமே தர முடியும் என பாஜ விடாப்பிடியாக இருந்தது.பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், கூட்டணியில் இருந்து விலக ஜேஜேபி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஜேஜேபி விலகினாலும் பாஜ ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. 90 எம்எல்ஏக்களை கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பாஜ 41 எம்எல்ஏக்களுடன் உள்ளது. 5 சுயேச்சைகள் ஆதரவு அளிப்பதால் பெரும்பான்மை பலத்தை பாஜ எட்டும். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனாலும், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை நேற்று திடீரென பதவியிலிருந்து விலகியது. அமைச்சரவையில் கட்டார் உட்பட 14 அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபியின் 3 உறுப்பினர்கள் இருந்தனர். அனைவரும் ராஜினாமா செய்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து பாஜவின் புதிய முதல்வராக அம்மாநில தலைவரும், குருஷேத்ரா தொகுதி எம்பியுமான நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். பாஜ சட்டப்பேரவை தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு புதிய முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தாத்ரேயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் 5 புதிய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

முதல்வராக நயாப் பதவியேற்றதால் காலியாக உள்ள குருசேத்ரா எம்பி தொகுதியில் கட்டார் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அரியானாவில் விவசாயிகள் போராட்டம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு, மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜ எம்பி தந்த பாலியல் தொல்லை உள்ளிட்ட விவகாரங்களால் பாஜ ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் முதல்வர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் டெல்லியில் கூட்டிய கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் 5 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. எனவே அவர்கள் பாஜவில் இணைவார்கள் என தெரிகிறது.

 

The post மனோகர் லால் கட்டார் பதவி விலகினார்; அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி பதவியேற்றார்: கூட்டணி முறிவால் பாஜ அவசர முடிவு appeared first on Dinakaran.

Related Stories: