வெற்றிவேல் வீரவேல் முழக்கம்

நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் படை நடத்தும் வேளையில் தங்கள் மனதில் வீரஉணர்ச்சி கொப்பளிக்கவும், மற்ற வீரர்களை உற்சாக மூட்டவும் பலவிதமான வீரமுழக்கங்களைச் செய்வர். அப்படி தமிழகத்து வீரர்களால் எழுப்பப்படும் வீரகோஷங்களில் ஒன்று, “வெற்றிவேல் வீரவேல்’’ என்பதாகும். தென்பாண்டி நாட்டில் வழங்கி வரும் நாட்டுப் புறச்செய்திகளின்படி வெற்றிவேல் என்பது கொற்கையிலுள்ள வெற்றி வேலம்மன் ஆலயத்திலும், வீரவேல் என்பது செந்திலாண்டவர் கையிலும் இருப்பதாகும். இந்த வெற்றிவேல் வீரவேல் முழக்கத்தைப் பெரிதும் கையாண்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன், கொற்கையில் வீற்றிருக்கும் வெற்றிவேல் அம்மனையும், திருச்செந்தூர் முருகன் கையிலிருக்கும் வீரவேலையும் வணங்கிப் போற்றி வந்ததாகக் கூறுகின்றனர்.

வெற்றிவேல் என்பது முருகன் கையில் இருக்கும் இலைபோன்ற ஆலிலை வடிவை உடையது என்பது, வீரவேல் என்பது நீட்டப்பட்ட சாய்சதுர வடிவம் கொண்ட நீட்டப்பட்ட சாய்சதுர வடிவம் கொண்டது என்றும் கூறுகின்றனர். வீரவேல் குத்துவேல் என்றும் அழைக்கப்படுகிறது. கொற்கையில் வெற்றி வேலம்மன் ஆலயம் சிறப்புறத் திகழ்கிறது. இங்கு எட்டுக் கரங்களுடன் சும்பநிசும்ப மர்த்தினியாகக் காளிதேவி வீற்றிருக்கின்றாள். இவள் சந்நதியில் சூலாயுதத்துடன் வேலாயுதத்தையும் வைத்துள்ளனர்.தென்பாண்டி நாட்டில் பல இடங்களில் காளிக்கு வேலாயி, வீராயி என்ற பெயர்கள் வழங்குகின்றன. காளிதேவியைப் போலவே துர்க்கையம்மனும் நீண்ட வெற்றிவேலை ஏந்துகின்றாள். சிலப்பதிகாரம் இதனை வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை என்று குறிக்கிறது. இலங்கையிலுள்ள ஆலயங்கள் பலவற்றில் முருகன் இரண்டு வேலுடன் காட்சி அளிக்கின்றார். இவை வெற்றிவேல் வீர வேல் என்றழைக்கப்படுகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமிக் கோயிலில் மூலவர் இரண்டு வேல்களுடன் காட்சியளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

The post வெற்றிவேல் வீரவேல் முழக்கம் appeared first on Dinakaran.

Related Stories: