துறையூர் மலைவாழ் கிராம மக்களுக்கான நடமாடும் சித்த மருத்துவ சேவை வாகனம்

 

திருச்சி, மார்ச் 12: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சேலம் மாவட்டத்தில் இருந்தபடி நேற்று காணொளி வாயிலாக சித்த மருத்துவத்துறையின் 16 மலைவாழ் கிராம மக்கள் பயன்பெறும் வகையிலான நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை துவக்கி வைத்தார்.இதை முன்னிட்டு திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு நடமாடும் சித்த மருத்துவ சேவை வாகனம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக பழங்குடியின மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடமாடும் சித்த மருத்துவமனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் இன்று (நேற்று) துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் திருச்சி மாவட்டம், டாப்செங்காட்டுப்பட்டி மலை கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. துறையூர் வட்டத்தில் உள்ள 16 மலைவாழ் கிராமங்களில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சித்த மருத்துவக்குழு வாரம் 4 நாட்கள் செயல்படும். இதில் ஒரு சித்த மருத்துவ ஆலோசகரும், ஒரு சித்த மருத்துவ மருந்தாளுனரும் இருப்பர். இத்திட்டத்தை பழங்குடியின மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஜேக்குலின் சித்ரா உள்ளிட்ட சித்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

The post துறையூர் மலைவாழ் கிராம மக்களுக்கான நடமாடும் சித்த மருத்துவ சேவை வாகனம் appeared first on Dinakaran.

Related Stories: