மதுரை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு

 

மதுரை, மார்ச் 11: மாசி மாத அமாவாசை மற்றும் பாரிவேட்டை திருவிழாக்களையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நேற்று அதிகரித்து காணப்பட்டது. மதுரை மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்படும் மலர்களை விவசாயிகள் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் இங்குள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மேலும் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் இருந்து அதிகளவில் பூக்களை கொள்முதல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டிகை காலங்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் திருவிழா காலங்களில் பூக்கள் விலை உயர்வது வழக்கம். இதன்படி இரு நாட்களுக்கு முன் மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

அடுத்ததாக நேற்று மாசி அமாவாசை மற்றும் கிராமங்களில் பாரிவேட்டை விஷேசங்களையொட்டி மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை. இதன்படி மல்லிகை கிலோ ரூ.300, பிச்சி ரூ.800, முல்லை ரூ.200, அரளி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.300 சம்பங்கி ரூ.100, செவ்வந்தி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. இவற்றை அதிக அளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொள்முதல் செய்தனர்.

The post மதுரை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: