கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு: போலீசில் வியாபாரிகள் புகார்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் துணை தலைவர் முத்துராஜ் தலைமையில் வியாபாரிகள் திருமங்கலத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வியாபாரிக்களுக்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங்கில் இருந்து கடந்த மாதம் விலை உயர்ந்த 4 பைக்குகள் திருடப்பட்டது. பட்டப்பகலில் திருட்டு அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளுடன் கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரை வாங்கி படிப்பது கூட கிடையாது. ‘’சரி நாங்கள் பார்த்து கொள்கிறோம்’’ என்று அந்த புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் கூட தர மாட்டார்கள். புகார் குறித்து காவல் நிலையம் சென்று போலீசாரிடம் முறையிட்டால் புகார் கொடுத்ததோடு சரி, விசாரணை எப்படி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறுகின்றனர்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு பட்டப்பகலில் பூ மார்க்கெட்டில் பார்க்கிங்கில் இருந்த ஒரு பைக்கை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு வெளியே செல்லும்போது 4 பேரையும் மடக்கி பிடித்து எதற்காக பார்க்கிங்கில் இருந்து பைக் எடுத்து சொல்கிறீர்கள், உங்களுடைய வாகனமா? அதற்கு உண்டான ஆதாரத்தை காட்டி விட்டு செல்லும்படி கூறியபோது அந்த கும்பல் எங்களை மிரட்டியது. உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாகனம் எடுத்துச்சென்ற நபர்களை பற்றி விசாரிக்காமல் தகவல் சொன்ன எங்களை மிரட்டுகின்றனர்.

புதிதாக வந்த இணை ஆணையர் விஜயகுமார், கோயம்பேடு மார்க்கெட்டில் குற்றச்சம்பவங்கள் குறித்து குறைகள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார். ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களை போலீசாரிடம் தெரிவித்தால் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் பைக் திருட்டு சம்பந்தமாக காவல் உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வியாபாரிகள் புகார் கொடுக்க சென்றால் போலீசார் கண்ணியமாக நடக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு: போலீசில் வியாபாரிகள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: