இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு: பூவை ஜெகன்மூர்த்தி தகவல்

திருவள்ளூர்: நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என மகளிர் தின விழாவில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். புரட்சி பாரதம் கட்சியின் மகளிர் அணி சார்பில், மகளிர் தினவிழா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, மாநில மகளிரணி தலைவி எம்.உமாதேவி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி நிர்வாகிகள் எச்.ஸ்டெல்லாமேரி, எஸ்.அபிராமி, செம்பரம்பாக்கம் ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் தேவி, ஜாய்ராணி ஆகியோர் வரவேற்றனர். புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன்மூர்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, தேர்தல் குறித்த ஆலோசனை, நிர்வாகிகளின் கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பூவை எம்.ஜெகன்மூர்த்தி கூறுகையில், ”புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுள்ளோம். திருவள்ளூர் சொந்த தொகுதி என்பதால் அதை கொடுத்தால் சிறப்பாக இருக்கும். இதைத்தான் நாங்களும் அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பேச்சுவார்த்தை முடியாமல் உள்ளது. அந்த கட்சிகளின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் புதிய சின்னம் வாங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தாமதமாகும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” என்றார். இதில், மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், எம்.மாறன், ஐ.ஏழுமலை, பழஞ்சூர் பா.வின்சென்ட், மணவூர் ஜி.மகா, பூவை ஆர்.சரவணன், கூடப்பாக்கம் இ.குட்டி, வலசை எம்.தருமன், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

The post இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு: பூவை ஜெகன்மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: