பூ மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு அக்னிச்சட்டி தயாரிப்பு பணி தீவிரம்

 

திருப்புவனம், மார்ச் 9: திருப்புவனம் பூ மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு நேர்த்திக்கடன் அக்னிசட்டி, பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்புவனம் புதூரில் பூமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கிருந்தாலும் 10ம் நாள் பங்குனி திருவிழாவில் வருகை தந்து பங்கேற்பது வழக்கம்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் நேர்த்திக்கடன் மற்றும் காப்புக்கட்டி விரதமிருக்கும் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி அம்மனை வலம் வருவது வழக்கம். ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பொம்மை உள்ளிட்ட நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் பூ மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

எனவே பூமாரியம்மனுக்கு நேர்த்தி கடனுக்காக குழந்தை பொம்மைகள், அம்மன் உருவ பொம்மைகள், ஆயிரம்கண் பானைகள், தீச்சட்டிகள் போன்றவை தயாரிக்கும் பணியில் புதூரில் உள்ள குலாலர் பெருமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 10ம் தேதி பூத்தட்டு திருவிழா நடக்கவுள்ளது. பத்தாம் நாள் திருவிழா மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பூ மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு அக்னிச்சட்டி தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: