சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி

சமயபுரம், மார்ச் 7: சமயபுரம் மாரியம்மன்கோயில் தேரோடும் வீதியில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. சக்தி தலங்களிலும் பிரசித்தி பெற்ற தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலத்தில்,வெளிநாட்டில் உள்ள பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். இவ்வாண்டு சித்திரை தேரோட்டத்தையொட்டி முன்னதாக பூச்சொரிதல் விழா மார்ச் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பாக நடைபெறும். முதல் பூச்சொரிதல் விழா வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால் கோயிலை சுற்றிலும் காலை முதல் இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்திரை தேரோட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்ைத கருத்தில் கொண்டு மதுரை ஐகோர்ட் உத்தரவின் பேரில், லால்குடி ஆர்டிஓ சிவசுப்ரமணியன், டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் நேற்று காலை சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள உத்தரவிட்டனர்.

அதன்பேரில், பெரும்பாலான கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுதற்கு சில கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளையும் தொடரும் என்று அறநிலையத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலை சுற்றியும் பரபரப்பாக காணப்பட்டது.

The post சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோடும் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: